Saturday, December 5, 2009

அவள்காலைப் பொழுது !

அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..

இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...


அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது..

அப்படியானால்
உலகை ஓர்முறை சுற்று
ஒட்டு மொத்தமும்
உன்னால் வசந்தமாகட்டும்.!

அதோ!
பசுந்தளிர்களின் நுனியில்
காத்துக் கிடக்கிறது
நேற்றைய மழையின்
மிச்சத்துளிகள்
உடனே வெளியில் வா
உன் மீது விழுந்து
பிறவிப்பயன் எய்தட்டும்....

கதிரவன் வந்து
கற்புடைக்கும் முன்
சாப விமோச்சனம்
கிடைத்து விடாதா என
புற்களின் நுனியில்
புலம்பிக் கிடக்கிறது
பனித்துளிகள்..
வா வந்து பதித்துவிட்டுப் போ
உன்
பாதகமலங்களை....




தயவு செய்து
துயில் எழு!
இல்லையேல்
இருள் இன்னும்
நீளக் கூடும்..
ஆம்!
உன் முகத்தில்
முழிப்பதற்காகவே
தன் முகத்தை
மூடி நிற்கிறான் சூரியன்...


எவ்வளவு நேரம்தான்
மலராமல் இருப்பது?
வா ! வந்து
வாசம்(ல்) திறந்து விடு
பாவம் அரும்புகள்...


கொடுத்து வைத்தவளடி நீ
வார்த்தைகள் கூட
உனக்காய் தோன்றியதுபோல்
வந்து குவிகிறதே!


முதலில் உனக்கு
திருஷ்டி சுற்றி போடவேண்டும்
திருஷ்டியோடு சேர்ந்து
சகலமும்
உன்னை சுற்றுகிறதே!


யார் சொன்னது?
ஒளீச்சேர்க்கை என்பது
தாவரத்திற்கு மட்டும்தான் என்று..

அவள் தாவணீ செல்லும்
திசை நோக்குங்கள்
உங்கள்
உயிர் செல்களும்
ஒளியை ஒட்டிக்கொள்ளும்..

0 comments: