Saturday, December 5, 2009

அவள்காலைப் பொழுது !

அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..

இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...


அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது..

அப்படியானால்
உலகை ஓர்முறை சுற்று
ஒட்டு மொத்தமும்
உன்னால் வசந்தமாகட்டும்.!

அதோ!
பசுந்தளிர்களின் நுனியில்
காத்துக் கிடக்கிறது
நேற்றைய மழையின்
மிச்சத்துளிகள்
உடனே வெளியில் வா
உன் மீது விழுந்து
பிறவிப்பயன் எய்தட்டும்....

கதிரவன் வந்து
கற்புடைக்கும் முன்
சாப விமோச்சனம்
கிடைத்து விடாதா என
புற்களின் நுனியில்
புலம்பிக் கிடக்கிறது
பனித்துளிகள்..
வா வந்து பதித்துவிட்டுப் போ
உன்
பாதகமலங்களை....




தயவு செய்து
துயில் எழு!
இல்லையேல்
இருள் இன்னும்
நீளக் கூடும்..
ஆம்!
உன் முகத்தில்
முழிப்பதற்காகவே
தன் முகத்தை
மூடி நிற்கிறான் சூரியன்...


எவ்வளவு நேரம்தான்
மலராமல் இருப்பது?
வா ! வந்து
வாசம்(ல்) திறந்து விடு
பாவம் அரும்புகள்...


கொடுத்து வைத்தவளடி நீ
வார்த்தைகள் கூட
உனக்காய் தோன்றியதுபோல்
வந்து குவிகிறதே!


முதலில் உனக்கு
திருஷ்டி சுற்றி போடவேண்டும்
திருஷ்டியோடு சேர்ந்து
சகலமும்
உன்னை சுற்றுகிறதே!


யார் சொன்னது?
ஒளீச்சேர்க்கை என்பது
தாவரத்திற்கு மட்டும்தான் என்று..

அவள் தாவணீ செல்லும்
திசை நோக்குங்கள்
உங்கள்
உயிர் செல்களும்
ஒளியை ஒட்டிக்கொள்ளும்..

Wednesday, December 2, 2009

ஓட்டைகள்

அம்மன் சாட்சியாக
நம் திருமணம் நடந்தே தீறும்
என்கிறாய்...

அது எப்படி சாத்தியம்?

நானோ கோவிலின் வெளியே
எங்கெளுக்கென நியமிக்கப்பட்ட
ஓட்டையின் வழியே அம்பாளைப் பார்க்கிறவன்..
நீயோ உட்பிரகாரத்தில்
அருகிலிருந்து அம்பாளை தரிசிப்பவள்...

அது எப்படி சாத்தியம்?


முதலில் ஓட்டைகள்
அடைபடட்டும்....

Wednesday, November 7, 2007

தீபாவளி

வானம் இன்று
செயற்கையாய் சிரிக்கும்
காற்றும் கூட
கலர்கள் தெளிக்கும்

கீழிருந்து மேல்
இடிகள் தோன்றும்
அல்லது
தோற்றுவிக்கப் படும்

வீதிகளெங்கும்
புத்தாடை வீசும்

வீடுகளெங்கும்
விளக்குகள் பேசும்
அவரவர் வசதியை
தீபம் திரிக்கும்

ஓலைக் கூடு
ஓட்டு வீடு
பளிங்குத் தரை
பட்டண அறை
எல்லாம் எல்லாம்
பண்டங்கள் படைக்கும்

பல உறவுகள்
பல உணர்வுகள்
சுவைத்து சுவைத்து
பொழுதுகள் ருசிக்கும்

ஆனாலும்
இன்னும் இன்னும்
பரவிக் கிடக்கிறது
காய்ந்த வயிறுகளின்
கனல் மூச்சுக்கள்
காற்றின் வெளியில்
காய்ந்த படியே...

ஆதலால்
புதியதோர்
தீபம் செய்வோம்
அதில்
புன்னகைத்
திரியை நெய்வோம்
அட்சய எண்ணையிட்டே
நாளும்
ஆளுக்கோர்
இரைப்பை காப்போம்.....

தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!

Saturday, November 3, 2007

முரண்

"சீ!
ஒரே கலீஜ்ஜா இருக்கு"
சொந்த ஊரை
மென்று துப்பினார்
அந்த அமெரிக்க ரிட்டன்

வியர்வை நொடிகளையும்
வற்றிய மார்பையும்
பொருட்படுத்தாது
பால் வார்த்த தாய்
முகம் சுழித்தாள்
அவன்
பெர்ஃபியூம் நாற்றம்
ஒத்துவராததால்...

தவிப் பூ

கடந்து செல்லும்
மனிதர்களை
மிச்சம் வைக்காது
"கணத்து" ஒலித்தது
சாலையோர
பூக்காரியின் குரல்
அதில்
தண்டல் காரன்
தெரிந்தான்..

Friday, September 21, 2007


வைகறை பொழுது!
பூங்காவின் புற்களில்
என்னை
தொலைத்திருந்தேன்..

திடீரென
என்னை
மீட்டெடுத்தது
ஓர் தென்றல்...


நிமிர்ந்து
நோக்கினேன்
ஒளி வெள்ளமாய்
அவள்!
புன்னகை செய்து
புறப்பட்டாள்...

மீண்டும்
தொலைந்தேன்..
இனியும்
மீள முடியா
தூரத்திற்கு.....
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...

நாம்
நாமாகும்
போதுமட்டும்
நிசப்தம் ஏன்?

பள்ளித் தோழியாய்
எதிர் வீட்டு
உறவாய்த்தான்
நம் அடையாளம்...

உன்
பாவாடைப் பருவம்
தாவணி பதித்த
முதல் நாள்
வீட்டுக்கு தூரம்
என்று
வெட்கம் பதித்தாய்

பெரியவாளாகிவிட்டாதாய்
பேச மறுத்தாய்..

அன்றே
சில கேள்விகள்
என்னுள்
அவசரமாகி
அவசியமாகின
இருப்பினும்
அடைகாத்தேன்...

பள்ளித் தோழியாய்
என்
பக்கம் நின்றவள்
வெட்கத்தீயில்
வெப்பம் பாய்ச்சினாய்..

போலியாய்
சில
பொழுதுகள்
கழித்தேன்..

சில நாட்கள்
உன்னை
கவனிக்க
ஆரம்பித்தேன்..

பிரம்மமுகூர்த்தத்தில்
எழுந்து
ஃபிரஷ்ஷாய்
குளித்து...


விரித்த கூந்தல்
உலர்த்திக் கொண்டே
விரிந்த முற்றம்
துடைத்து...


சாணி தெளித்து
சங்கிலி கோலத்தில்
புள்ளிகள்
கைது செய்து...

பரபரப்பாய்
பம்பரமாய்
என் பார்வைக்குப்
பட்டாய்..

நிஜங்கள் கற்பனையாகி
கற்பனைகள் நிஜமாகும்
நிகழ்வுகள்
தொடங்கிற்று....

"உன்
வளவிச் சத்தம்
கேட்ட பின்புதான்
கோழி கூட
கூவுகிறதோ"

அட!
நான் கவிஞனாக்கப்
படுகிறேன்
அடுத்த நிலைக்கான
கேள்விகளோடு.....

உண்மையில்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...